Tuesday, January 25, 2011

மணத்துறவு 1


தமிழத்தின் துப்பறியும் இதழ்கள் - பாதிரக்குடியில் ஒரு குரு பாலியல் தொடர்பான (பெடபிலியா) சிக்கல்களில் மாட்டிக் கொண்டதைப் பற்றியும் -அதனைத்தொடந்து உதகையைச் சேர்ந்த குரு சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அதே பிரச்சனைக்காக மாட்டிக் கொண்டதைப் பற்றியும் விலாவாரியாக எழுதித் தீர்த்தன.
இன்னும் எத்தனை நபர்கள் அடுத்து இதில் வர இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
தினமலர் இதை மறந்து விடாமல் எழுதி வந்ததது.
இதை ஏன் சன் டி. வி. ஒளிபரப்ப வில்லை என்று சிலர் கேட்கிறார்கள். ஏதோ சன் டி.வி. யும் நாமும் சித்தப்பா மக்கள் மாதிரி.

அமெரிக்கா மற்றும் அயர்லாந்து திருச்சபைகள் மிகப் பெரிய சவால்களை இதனால் சந்தித்து வருகின்றன என்பதும்அதைத் தொடர்ந்து திருச் சபையின் உயர் மட்டத் தலைவர் மிகப் பெரும் குற்றச் சாட்டுகளை சந்தித்து வருவதும் நாம் அறிந்ததே.
திருச்சபை உலக அளவிலும் மிகப்பெரிய ஊடகச் சவால்களை சந்தித்து வருகிறது.
இதைப் பற்றிய தொடர் கிண்டல்களும் - திருச்சபையைப் பற்றிய கேலிச் சித்திரங்களும் நமக்கு இப்போது தேவையான ஒன்றுதான்.
இந்த கார்ட்டூன்களைப் பார்த்து சிரிக்கலாம். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமல்லவா!
நியூ யார்க் டைம்ஸ் - இதைப் பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறது. அதில் இன்னும் தேடினீர்கள் என்றால் இன்னும் நிறைய இருக்கின்றது.
நியூ யார்க் டைம்ஸ் இதையே ஒரு கொள்கையாக வைத்திருக்கிறது என்று சொன்னதற்காக ஒரு பேராயரைப் பற்றிய ஒரு கட்டுரையும் கேலி செய்து இடம்பிடித்திருக்கிறது.

முதலில் சில கருத்துக்களை மிகத் தெளிவாக பதிய வேண்டியது அவசியம்.
  • எந்தத் தருணத்திலும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை நியாயப் படுத்த முடியாது.
  • அதிலும் பல ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு பணிக்கென அமர்த்தப் படுகிற குருக்கள் அதில் ஈடுபடுவதை நாம் ஒருபோதும் சரி என்று சொல்லிவிட முடியாது.
  • வன்கொடுமைக்கு ஆளான அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல: அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைக் கண்டிப்பாய் செய்ய வேண்டும்.
  • தனி மனித மதிப்பீடுகள் அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்துக் கொடுமைகளையும் எதிர்க்கிறோம்.
  • அதோடு சேர்த்து இதில் ஈடுபட்ட நபர்களையும் நாம் இந்த ரீதியில் பார்க்க வேண்டும் - மன அளவில் பாதிக்கப் பட்டதன் விளைவாகவே இச் செயல்களில் ஈடுபடிருந்தால் அதிலருந்து மீண்டு வர நம் உதவிகளை செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகே நாம் பின் வருவனவற்றை எழுதுகிறோம்.

ஏற்கனவே நித்தியானந்தா செய்தியில் பத்திரிக்கையின் பொறுப்புணர்வு பற்றி அதிகம் எழுதிவிட்டதாலும் -பத்திரிக்கைகள் தங்கள் வியாபாரப் போக்கையே அதிகம் தன் மூலதனமாகக் கொண்டிருப்பதை நாம் அறிந்ததாலும் இப்போது அதை விடுத்து மற்ற நுணுக்கங்களை அலசுவோம்.

இதுக்கு கலைஞர் ஸ்டைலுதான் சரிப் பட்டு வரும்னு தோணுது - கேள்வியும் நானே பதிலும் நானே.

1. ஏன் பத்திரிக்கைகள் திருச்சபையை தாக்குவதையே தன் முதல் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன?

திருச்சபை தன் ஆக்டோபஸ் கரங்களை எல்லாத் தளங்களிலும் விரித்து தான்தான் எல்லா அறக் கேள்விகளுக்கும் - அறப் புதிர்களுக்கும் பதில் சொல்லும் அல்லது எது சரி என்று சொல்லும் ஆற்றல் படைத்த அற அடித்தளத்தைக் கொண்டிருந்த ஒரு மிகப் பெரிய நிறுவனமாகக் காண்பித்துக் கொண்டிருந்தது. அதாவது, எல்லாத் தளங்களிலும் (உலகப் படைப்பு - அழகியல் - மனித வாழ்வின் நோக்கம் - இன்னும் பிற) விரிந்திருந்த கரங்கள் வெறும் அறத்தளத்திற்கென்று மட்டும் சுருங்கிப் போனது. அதில் மட்டுமே தான் சக்தி வாய்ந்தவன் என்று நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறது. இதில் மட்டும்தான் திருச்சபை தன் இருப்பைக் காண்பித்துக் கொண்டிருக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்று யாரும் திருச்சபையைக் கேட்கப் போவது இல்லை. அல்லது ஒரு மனிதனுக்கு உளவியல் ரீதியான பிரச்சனை பற்றி விசாரிக்க யாரும் திருச்சபை நபர்களைத் தேடி வர வேண்டிய அவசியம் இல்லை. சிசுக்கொலை தவறு - ஓரினச்சேர்கை தவறு - திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது தவறு - என்று இன்றைய உலகம் எதை எல்லாம் சரி என்று அறவியலில் நிலை நாட்ட முயன்று கொண்டிருக்கிறதோ அந்த தளத்தில் திருச்சபை தன் இருப்பை உரத்த குரலில் தெரிவித்துக் கொண்டிருந்தது.

இப்போது இது போன்று அறப் பிரச்சனை தொடர்பாக திருச்சபை உறுப்பினர்கள் மாட்டிக் கொள்கிறபோது - அறப் பிரச்சனை தொடர்பாக எது சரி எது தவறு என்று சொல்வதற்கான அருகதை உனக்கு இல்லை என்று சொல்வதுதான் இன்றைய பத்திரிக்கைகளின் நோக்கமாகத் தெரிகிறது. உங்க பிரச்சனையை முதலில் சரி பண்ணு பின்னாடி எங்க கதையைப் பாக்கலாம் - அப்படிங்கிறதுதான். அதுமட்டுமல்ல, திருச்சபை எந்தவிதத்திலும் உலகில் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக இருக்கக் கூடாது என்பதும்தான் இதன் முதல் பிரச்சனை. எனவே இது வெறும் பாலியல் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல யார் பெரியவன் என்பதற்கான சண்டையில் வருகிற அதிகார அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். இருளில் குற்றங்கள் செய்துவிட்டு வெளியில் பாவமன்னிப்புக் கொடுக்கும் நமக்கு இது சரியான சவுக்கடியாகவே தெரிகிறது. இது நிச்சயம் நமக்குத் தேவைதான். பல வரலாற்றுப் பிழைகளுக்கு நாமும் ஒரு விதத்தில் பொறுப்பானவர்களே.

2 . சரி அதுக்கு போப் என்ன பண்ணுவார் பாவம்?

அதுவும் சரிதான். ஆனா ஒரு அப்பா தன் மகனோ மகளோ தவறு செய்தால் மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் இருக்க அதை மறைக்க முயற்சிப்பார். அதைப் போலவே தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குரு தவறு செய்யும்போது அதை மறைக்க அவர் முயன்றிருக்கலாம் அல்லது தெரியாமலே இருந்திருக்கலாம். ஆனால் பிற்பாடு செய்திகள் வெளிவரும் போது அதை மறைத்ததற்காக ஒரு தந்தை என்ன கவலையை அடைவாரோ அல்லது தண்டனையை அனுபவிப்பாரோ அதையே தற்போது திருத்தந்தையும் அனுபவித்து வருகிறார் என்று நினைக்கிறேன்.

ஆனாலும், உடனடியாக தவறு என்று தெரிகிற போது அதை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவமும் வேண்டும்.


ஒரு விஷயம்: சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கிற ஒரு குரு திருச்சபையின் உறுப்பினர்தான் என்பது ஊடகங்களில் வெளி வருவதற்கு முன்புவரை திருத்தந்தைக்குத் தெரியாது. அப்படிப்பட்ட நபர் திருச்சபையில் குருவாக இருக்கிறார் என்பது கூட அவருக்குத் தெரியாது - தெரிந்து கொள்ளவும் முடியாது - தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. தன் உறுப்பினரையே தெரியாத நிலையில் எல்லாவற்றிற்கும் அவரைக் குறை சொல்லுவது தவறு என்று தோன்றுகிறது.

ஒரு குரு மாட்டிக் கொண்டதற்காக திருத்தந்தையைக் குறை சொல்லுவது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஏன்?
ஒரு குருவும் திருச்சபையின் உறுப்பினர்தான் என்கிற விதத்தில் அதற்காக அந்த நிறுவனத்தின் தலைவரை குறை சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனினும் சிலர் அதை சரி என்று வாதிடலாம்.
எனக்கு ஏன் வேதனை என்றால் - இது சரி என்றாலும் –
எந்த ஒரு கிறித்தவன் பாலியல் பிரச்சனை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டாலும் அல்லது கிரிமினல் வழக்கில் மாட்டிக்கொண்டாலும் - அதற்காக ஊடகங்கள் திருத்தந்தையைக் குறை சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் - குருக்கள் மாட்டும்போது மட்டும் திருத்தந்தையைக் குறை சொல்லுவது - எனக்கு வேதனையை உண்டு பண்ணுகிறது - ஏனெனில் நம் திருச்சபை இன்னும் (வத்திக்கான் இரண்டிற்குப் பிறகும்) மக்கள் திருச்சபையாக இல்லை - வெறும் குருக்கள் திருச்சபையாகத்தான் இருக்கிறது அல்லது அதிகாரத் திருச்சபையாகத்தான் இருக்கிறது என்பதற்கு இது மிகப் பெரிய உதாரணம். உலக இறையியலார்கள் மற்றும் தமிழக இறையியலாளர்கள் எழுதுவது போல இன்னும் இது மக்கள் திருச்சபையாக எல்லாம் இல்லை.
இதுதான் மிகப் பெரிய வேதனை.

எந்த ஒரு அடிமட்ட உறுப்பினர் தவறு செய்தாலும் அதற்காக திருச்சபை தவறு செய்தது போல உணர வேண்டும் என்பது மட்டுமல்ல - குருக்கள் எந்த விதத்திலும் அடிமட்ட உறுப்பினர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் இல்லை. [பணியில் மட்டுமே உயர்ந்தவர்கள்] எனவே இந்த நிகழ்விற்குப் பிறகாவது திருச்சபை தனது அமைப்பைப் பற்றி - ஆயர்களின் குருக்களின் பனி பற்றி - அனைவரின் அதிகாரம் பற்றி - இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று இன்றைய நிலையில் நமது பனியின் நோக்கம், திருச்சபையின் நோக்கம் - இன்றைய இறையாட்சிப் பனி என்ன - உண்மையான கிறித்தவ வாழ்வு எது - எப்படி சமுதாய விடுதலை என்பது முழு மனித விடுதலையோடு ஒன்றியிருக்கிறது -

இதெல்லாம் இதுவரை பேசாமல் இல்லை. இருக்கிறதை மீண்டும் நினைவு படுத்திக்கொண்டாலே போதும்.
இல்லையென்றால் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் - மீண்டும் லத்தீனில் பூசை வைப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம். அல்லது ஆல்டரில் mic வைக்கலாமா - பூத்தொட்டிகள் வைக்கலாமா வைக்கக் கூடாதா என்று பேசலாம்.

3 . அப்ப ஆயர்கள் மீது குறை சொல்லலாமா?

அவர்களும் என்ன பண்ணுவார்கள் பாவம்.
பிள்ளைகள் செய்யற தவறுக்கு அப்பா என்ன செய்வார்.
கண்டிக்கலாம்.எனக்குத் தெரியும்னு சொல்ற பிள்ளைகளை என்ன பண்ண முடியும்?
சரி நீனே பாத்துக்கன்னு விட்டுற வேண்டியதுதான்.
போப் சொன்னமாதிரி கை கழுவி விட்டுட்டா நல்லதா?
(எழுத நிறைய விஷயங்கள் இருக்கே!)
அதுவுமில்லாமல் ஒருவர் செய்கிற தவறுக்கு இன்னொருவரை பலிகடா ஆக்குவதும் தவறுதான்.
ஆனால் ஏன் குருக்கள் இப்படி இருக்கிறார்கள் என்பதற்குஅவர்களுக்கும் ஆயர்களுக்கும் உள்ள உறவு நிலை கூட ஒரு காரணமாக இருக்கலாமோ?
தெரியலை .
இருந்தாலும், அதைபோய் ஒரு காரணமா சொல்லுவது எப்படின்னு தெரியலை.


4 . அப்ப யாருதான் காரணம்?
யாரு - நம்மதான். அடிப்படையில குருக்களின் மன நிலை நிறைய மாறியிருக்குன்னு தோணுது.
என்னதான் நாம் வந்து வாழ்க்கையை sacrifice பண்ணுனேன் பேர்வழி - ன்னு பேசுனாலும்
அப்படி யாரும் sacrifice பண்ணின மாதிரி தெரியலை.
நல்ல இடம் - நல்ல சாப்பாடு - அதிக அதிகாரம் - நம் முன்னோர்கள் சம்பாதித்து வைத்த மரியாதை -
கடவுளின் குரல் என்கிற விதத்தில் அதற்குக் கிடைக்கிற பயம் கலந்த மரியாதை -
நாம் தவறே செய்தாலும் மறைக்க முயல்கிற மக்களும் உயர் அதிகாரிகளும் -
அல்லது மறைக்க செய்வதற்கான சக்தி வாய்ந்த பணம் - இன்னும் என்னவெல்லாம் ----

இதுதான் எந்தத் தவறையும் துணிந்து செய்வதற்கான அதிகாரத்தைக் கொடுக்கிறது.
கட்டுப் படுத்துவதற்கு யாரும் இல்லை என்கிற துணிச்சல்
சமூகம் கொடுக்கும் அழுத்தம்
[பாலியல் உணர்வைக் வெளிப் படுத்தினால் அதனால் சமுதாயம் நமது பேரைக் கெடுக்கிற நிலை.
ஒரு சாமியார் ஒரு பெண்ணோடு பேசினாலே இட்டுக் கட்டி பேசும் சமுதாயம்.
எனவே யாருக்கும் தெரியாத விதத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது]
தன் சிறு வயதில் தான் இவ்வாறு கொடுமைப் படுத்தப் பட்டது,
அல்லது புதியதாய் ஏதாவது முயற்சி செய்யும் ஆர்வம் –

இன்னும் என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பதெல்லாம் பட்டியல் இடலாம்.

எந்த ஒரு தவறையும் தனி ஒரு மனிதன் தான் செய்கிறான் என்கிற விதத்தில்
அவரவர்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
அதே சமயத்தில் குற்றம் புரிந்தவர் மனதளவில் பாதிக்கப் படும் போது
அவர்களை ஆற்றுப் படுத்தும் செயல்களும் அவசியம்.
இதில்தான் ஆயர்களின் பங்களிப்பும் சக குருக்களின் உதவியும் அதிகம் தேவைப் படுகிறது. அதற்காக எல்லாத் தவறையும் சரி என்று சொல்ல முடியாது.

எல்லாருமே தவறுகிறவர்கள் என்கிற நிலையில் இது போன்ற தவறுகள் - குற்றங்களுக்கு எதிராக நாம்தான் இன்னும் உரத்து குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.

நித்தியானந்தா பரவாயில்லை என்று அவருக்கு ஆதரவான அலை
தமிழகத்தில் வர நாம் காரணமாக இருக்கிறோம்.

எப்படி ஒரு மனிதன் அதுவும் குரு இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய முடியும். சிறுவர்களை –
கேட்கக் கூட முடியவில்லை.
நம் உருவாக்கத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது.

நல்ல மனிதனாக இருக்கிறவன் - கெட்ட மனிதனாக வெளியேற்றப் படும் சூழல்.
குருகுலம் வந்தவுடன் - அன்புக்குப் பதில், பணிவுக்குப் பதில், வேலைக்குப் பதில் -
நமக்கே ஒரு திமிர் வந்து விடுகிறது. நான் குரு மாணவன். என்ன பண்ண முடியும்.
நான் திருத்தொண்டன் - நான் பணியாளன் - [வெளியிலருந்து இதையெல்லாம் யாரவது படித்தால் சிரிப்பான்.]
குரு பணியை மையப் படுத்துபவனாக இருக்க வேண்டும்.
தன் நோக்கமல்ல பிறரின் நல வாழ்வுக்கான சேவைகளில் ஈடு படுபவனாக இருக்க வேண்டும்.

துறவறம் என்பதே எந்த ஒரு சிறு உறவுச் சிக்கல்களுக்கும் தன்னை குறுக்கிக் கொள்ளாமல் பரந்து பட்ட மன நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டது அல்லது உருவானது.
இது நாமே உருவாக்கிக் கொண்டது.
இதில் கடவுளை இழுப்பதற்கு வேலையில்லை.
[ஒருவேளை எனக்கு திருச்சபை வரலாறு தெரியவில்லையோ என்னவோ.
இதைப் பற்றி வேண்டுமானால் பிறகு எழுதலாம்]

சிறு பந்தத்துக்குள் யாரும் குறுகிப் போய்விடக் கூடாது என்பதுதான் நோக்கம்.
ஆனால் நாம் மனதளவில் சுருங்கிபோய்விட்டோம்.
பணம் மையப் படுத்தப்பட்டு விட்டது.
பணம் பெற என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கிற நிலையில்
பணத்தளவில் நம்மைச் சுருக்கிக் கொண்டோம்.
பணம் வந்ததும் பொருள்கள் வாங்கிக் குவித்து
பொருள்களோடு நாம் நம்மைப் பொருத்திக் கொண்டோம்.
மனிதன் என்பதைத் தாண்டி நாம்
சாதிய அளவில் நாம் சுருங்கிப் போனோம்.

மனித நேய உணர்வுகள் மழுங்கிப் பொய்
உணர்சிகளுக்குள் சிக்குண்டு போனோம்.

அதனால்தான் எல்லாமே.

பாலியல் என்கிற உணர்வின் சக்தியை மாற்றுப் படுத்த ஆயிரம் வழிகள் இருக்கும்போது நாம் -- மாற்றுப் படுத்துவது எப்படி என வழி தெரியாமல் இருக்கிறோம்.

எதற்காக குருக்கள்?

திருப்பலி வைக்க மட்டுமென்றால் அதற்கு மனத்துறவு அவசியமில்லை.
எனவே நமது பணியை பற்றி அது எப்படி இருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் ஆய்வு செய்வதற்குஇறை இயலாளர்கள் இருக்கிறார்கள் என்பதால்

நாம் இப்போது சுய ஆய்வு செய்யலாம்.

நாம்தான் விரும்பி இதில் வருகிறோம்.
என்னால் இயலாது என்றால் - வெளி வருவதற்கான துணிவு நமக்கு வேண்டும்.


5 . சரி என்னதான் செய்யலாம்?

செபம் செய்யலாம்.
வேறென்ன.

No comments:

Post a Comment