Monday, November 1, 2010

மனத்திடம் வேண்டும்

டாவின்சி கோட்  புத்தகம் வெளி வந்த போது, திருச்சபைக்கு பெரும் அவதூறு வந்து விட்டது என்று தங்களின் கத்தோலிக்க விசுவாசத்தை பறை சாற்ற அந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்தத் திரைப் படத்தை தடை  செய்ய வேண்டும் என்றும் கூக் குரலிட்டார்கள். என்ன ஆயிற்று? புத்தகமும் விற்றுத் தீர்ந்தது, படமும் வசூலை அள்ளியது.

சொல்லப்படும் செய்தி உண்மையானால், அதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் வேண்டும், இல்லையென்றால் மறுத்துச் சொல்கின்ற மனத்திடமும்உண்மைக் கருத்தை வெளியிடும் நுண்ணறிவும் வேண்டும்.

Angels and Demons   - இருந்த இடம் தெரியாமல் இருந்த புத்தகம்- மீண்டும் பதிப்பிக்கப் பட்டு, திரையிலும் வந்து திருச்சபைக்குள் இருக்கிற பழமை வாதத்தை எடுத்துச் சொன்னது.

இந்த நாவல்களை எல்லாம் தாண்டி, - பத்திரிகைகள் வத்திக்கான் மீது மிகுந்த பாசத்தோடு, என்ன நடக்கிறது என்பதை உன்னிப் பாய் கவனித்து வருகிறதுஅமெரிக்காவில், குருக்களின் பாலியல் தொடர்பான சர்ச்சைகள், சிறுவர்களின் மீது குருக்களின் பாலியல் கொடுமைகள் - பல மறைமாவட்டங்களை ஒட்டு மொத்தமாக ஒன்றுமில்லாத நிலைக்கு மாற்றியது. சொத்துக்களை எல்லாம் விற்று பணம் கொடுக்க வேண்டியதாயிற்று.

அயர்லாந்து இப்போது விழி பிதுங்கி நிற்கிறது. அதைத் தொடர்ந்து வத்திக்கானுக்கு பல நெருக்கடிகள்.

மணத்துறவை   மீண்டும் திருச்சபை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மணத் துறவை இயேசு கட்டாயம் அனைவரும்மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னதாகவோ அல்லது அது குருக்களுக்கு அவசியம் என்று விவிலியம் சொல்வதாக நமக்குத் தெரியவில்லை.

தொடக்க காலத்து திருச்சபையும் இதற்கு முற்றிலுமாக உடன்பட்டதாகவும் சொல்வதற்கு இல்லை. அதற்கு நாம் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா? -
Tradition . பாரம்பரியம் மிக அவசியம் ? ! ?

நன்றாக யோசித்துப் பாருங்கள்.
இன்றைக்கு மீடியாவின் அபரிமிதமான வளர்ச்சியும் அதன் கழுகுக் கண்ணும்தான்
திருச்சபையை தெருவுக்குஇழுத்து வருகிறது என்று சொல்வோமானால் நம்மைப் போல உலகம் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதற்கு முன்பு செய்திகள் வெளியே வரவில்லை - இப்போது வருகின்றன.

எத்தனை துறவிகள் வசித்த கோட்டைகளுக்குள் நடந்தது என்ன என்பது நமக்குத் தெரியுமா? மணத் துறவை கடைபிடித்து திருமணம் செய்யாதவர்  கூட செய்ய யோசிக்கும் தவறுகள், குற்றங்கள் எவ்வளவு நடந்தன.

மீண்டும் பழையதைக் கிளறுவதால் ஒரு புண்ணியமும் இல்லை. இனிமேல் இருக்கும் திருச்சபையாவது ஒழுங்காக இருக்குமா?

இத்தனைக்குப் பிறகும் நான் ஏன் ஒரு கிறித்துவனாக இருக்கிறேன்?
மனிதர்கள் செய்கிற தவறுக்கு கடவுளை குறை சொல்ல முடியுமா? இவர்கள்தான் எனக்கு விசுவாசத்தைக் கொடுக்கிறார்களா என்ன?
பலர் செய்கிற தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக எல்லாரையும் குறை சொல்ல முடியுமா ?
கடவுள் அவர்களைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை மக்கள் மத்தியில் நிறைய இருப்பதால்தான் இவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள மாட்டேன் என்கிறார்களோ?

சரி எல்லாரும் மதம் மாறிக் கொள்ளலாமா? எந்த மதம்?
எந்த மதத்தில் தவறுகள் இல்லை. பயத்தினால் ஒருவனை தவறு செய்ய விடாமல், தவறாமல் இருக்கிற மதங்கள் -
தனி மனிதர்கள் தங்களை கடவுள் என்று அறிவிக்கிற மதங்கள் -  

"கடவுள் இல்லை என்பவனை நம்பலாம்: இருக்குன்னு சொல்றவனையும் நம்பலாம்.
நான்தான் கடவுள்-ன்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது
- தமிழ் திரைப் படங்கள் கூட இது போல மேற்கோள் காட்டக்கூடிய வசனங்களை கொண்டுள்ளது ஆச்சரியம்தான்.